அப்போது நான் சிறுபெண்
ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் அம்மா சித்தி என்று பெண்கள்.
அப்பர் பர்த் ஏறமுடியாமல் தவித்த போது நாற்பது வயது மதிக்கதக்க நபர் உதவி செய்தார். அவர் மிக கண்ணியமாக் பேசினார்.
எனக்கு அப்பர் பர்த் படுக்கை செய்து கொடுத்து நீ படுத்தக்க என்று லைட்டை ஆஃப் செய்து மறுபடி மேலே வந்து போர்வையை போர்த்தி விடும் அந்த விநாடி நேரத்தில் இரண்டு கைகளாலும் வளரவே ஆரம்பிக்காத என் மார்பை பிடித்து எடுத்தார்.
என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் இறங்கிவிட்டார்.
அதன் பிறகான இரவு பொழுதில் நான் தூங்கவே இல்லை. விடியும்வரை முழித்துக் கொண்டே இருந்தேன். கண்மூடினால் அதே கேவலமான கைகள் மறுபடி வராது என்று நிச்சயமாக தெரியாத போது எப்படி கண்மூடி நிம்மதியாய் தூங்க முடியும்.
நான் என்பதை வெறும் உடல் என்று உணர வைத்த அந்த நாய் எவ்வளவு பெரிய துன்பத்தை செய்துவிட்டு போய்விட்டான். அவன் உடலோடு விளையாடவில்லை. என் மனநிலையில் அல்லவா பாதிப்பை ஏற்படுத்திவிட்டான்.
அடுத்த ஒரு வருடத்தில் ஒருநாள் என் தொடை இடுக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. அதைப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து கண்டுபிடித்துவிட்டேன்.
ஆம் முந்தைய நாள் ஒருநாள் முழுவதும் வாடகை சைக்கிளில் ஊரை சுற்றிக் கொண்டிருந்தேன். சைக்கிள் அழுத்தி அழுத்திதான் ஏதோ காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டேன்.
கடவுளே எப்படியாவது இக்கட்டில் இருந்து காப்பாற்று இனிமேல் சைக்கிள் ஒட்டவே மாட்டேன் என்று வேண்டிக்கொண்டேன். அழுது கொண்டே இருந்தேன்.
வீட்டில் ஒரு அறையில் ஒதுங்கி இருந்தேன். அம்மா முகத்தை வைத்து கண்டுபிடித்து நான் வயசுக்கு வந்ததாக சொல்லிவிட்டார்கள்.
அதை சொல்லும் போது அம்மா என்னை மேலிருந்து கீழாக பார்த்தார்கள். பின்பு பக்கத்து வீட்டு அக்கா என்னை பார்த்தார்கள். அதன்பிறகு சடங்கு விழாவில் ஊராரே என்னை பார்த்தார்கள். பார்த்தார்கள் பார்த்தார்கள். மொத்த உலகமே என்னை பார்த்தது. என்னை பார்க்கவில்லை. என் உடலை பார்த்தார்கள்.
அங்கே நானில்லை என் உடல் பிரதானமாக
போய்விட்டது. நானே நான் நானில்லை என் உடல்தான் என்ன நம்ப ஆரம்பித்தது அந்தவிநாடியில்தான்.
அப்படித்தான் பல பெண்கள் மனதிலும் இச்சமூகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீ என்பது உன் உடல்தான் என்று யாராவது அதிகமாக நினைவு படுத்துவதாக நடந்து கொண்டால் கடுமையான எரிச்சலும் கோபமும் அடைகிறேன்.
இப்படி ஒருவர் சொன்னார்.
ஆங்கிலத்தில் இதை Sexual Objectification என்கிறார்கள்.
பாலியல் பண்டமாக, உடலாக எதிராளியை உணர வைக்கும் போது அது அவர்கள் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
திருமணம் ஆன புதிதில் நானும் மனைவியும் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் ஏதோ ஒன்றை சீரியஸாக விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென மனைவி என் முலைக்காம்பில் கை வைத்தார்.
திடீரென்று தொடை நடுவே கைவைத்தார். பின்னால் கை வைத்து தடவினார். நான் அளவில்லாத எரிச்சல் ஆனேன். “என்ன லூசு ஏன் இப்படி எரிச்சலூட்ற” என்று கத்தினேன்.
அதற்கு மனைவி “ இது மாதிரி நான் வேற எதாவது டாப்பிக் இண்டிரஸ்டிங்கா பேசும் போது நீங்க பலமுறை செய்திருக்கீங்க. அப்ப எனக்கு இதே எரிச்சல்தான் இருக்கும். பிடிக்கவே பிடிக்காது”
“நீ அப்பவே சொல்ல வேண்டியதுதான”
“சொல்லி இருக்கேன். அது உன் காதுலேயே விழாது. ஹி ஹின்னு இளிச்சிட்டே கைசெய்யும். அதான் நான் செய்தா எப்படி இருக்குமுன்னு காட்டத்தான்”
அதிலிருந்து அந்த பழக்கத்தை விட்டேன்.
பல ஆண்களுக்கு இந்த சந்தேகம் இருக்கும்.
முந்தைய நாள்தான் இரவெல்லாம் மொபைலில் காதலை பொழிந்த காதலி காலையில் மார்பை தடவினால் ஏன் சட்டென்று தட்டி விடுகிறாள். இங்கேதான் யாருமில்லையே இவள் ஏன் பிகு பண்ணுகிறாள் என்று தோன்றும்.
காரணம் ரொம்ப சிம்பிள்.
எடுத்த உடனே மார்பில் கையை வைத்தால் பெண் அங்கே தன்னை ஒரு பாலியல் பண்டமாக உணர்கிறாள்.
அவளுக்குள் இருக்கும் உண்மையான அவளைப் பார்க்காமல் பாலியல் பண்டமாக உணர வைக்கும் போது “நான்னா அதுக்குதானா” என்று கடுப்பாகிவிடுகிறாள். அவள் தன்மானம் எங்கே பாதிக்கப்படுகிறது. அச்செயலை கடுமையாக எதிர்க்கிறாள்.
“என் கணவர் உறவில் மிகத்திறமையானவர். ஆனால் மனதளவில் என்னை வசதியாக வைக்கவே இல்லை. ஏதாவது சொல்லி நெருக்கடி உண்டு பண்ணி கொண்டே இருப்பார். அவமானப்படுத்திக் கொண்டே இருப்பார். தன்னிச்சையாக படுக்கையில் என்னால் அவரோடு ஒட்ட முடியவில்லை. எனக்குள் எதுவும் மலரவில்லை. ஈரமில்லை. அவர் ஏன் ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார். விளக்கினால் இன்னும் அவமானப்படுத்திக் கொண்டே இருப்பார். பெரியவர்கள் குழந்தை எங்கே என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பிறகு விநோதமான முடிவு ஒன்றை எடுத்தேன். என்னை இரண்டாக பிரித்தேன். காலையில் இருந்து மாலை வரை இருக்கும் நான் ஒன்று. இரவில் இருக்கும் நான் வேறொன்று. பகலில் நடக்கும் சம்பவங்களை இரவுக்கு எடுத்து வருவதில்லை. அதன் பிறகுதான் ஒரளவுக்கு உறவில் என்னால் ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது.” இப்படி ஒரு அனுபவம் கேட்டிருக்கிறேன்.
இங்கேயும் அதே Sexual Objectification கருத்துதான்.
“என் கணவர் என்னை வெறுக்கிறார் ஆனால் என் உடலை இரவு நேசிக்கிறார். அப்படியானால் நான் வெறும் அவர் பாலுணர்வு பசிக்கான பண்டமா. ” என்ற எண்ணம் அவர் மனதில் விரிந்து உடல்வாழ்க்கையை பாதிக்கிறது. உலகம் குழந்தையை எதிர்ப்பார்க்கும் என்று அவர் தன்னையே ஒரு மனநெருக்கடிக்கு உள்ளாக்கி உறவில் ஈடுபடுகிறாள்.
வெளியில் இருந்து பார்க்கும் கணவனுக்கு என்ன தெரியும்
“என் பொண்டாட்டி என்ன திட்டுனாலும் அவமானப்படுத்தினாலும் சிரிச்ச முகத்தோட ஏத்துப்பா.நைட் ஆனா நல்லா ஒத்துழைப்பா. ஆர்கசம் அடைவா. நா அவள மகிழ்ச்சியா வெச்சிருக்கேன்” இப்படியே நினைத்துக் கொண்டிருப்பான்.
Sexual Objectification பற்றிய அறிவு இல்லாத காரணத்தினாலே இப்படி பல ஆண்கள் Abuse செய்து கொண்டு அலைகிறார்கள்.
பள்ளி கல்லூரிகளில் அலுவலகங்களில் என்று இருக்கும் அனைத்து ஆண்கள் புழங்கும் இடங்களிலும் Sexual objectification of women என்று போர்டில் எழுதிப் போட்டு தாராளமாக விளக்கலாம்.
இது எப்படி எப்படியெல்லாம் பெண்களை பாதிக்கிறது என்று நாலைந்து கேஸ் ஸ்டடிக்களை அவர்களிடம் விளக்கி பேசலாம்.
“நீ ஒரு அரசு அதிகாரியா இருக்க. உன் ஆபீஸ்ல ரொம்ப மரியாதையா ஒருத்தர் பேசுறாரு. ரோட்ல டேய் வாடான்னு கூப்பிடுறாரு. அப்ப நீ என்ன ஃபீல் பன்ணுவ இவனுக்கு என் மேல மரியாதை இல்ல என் பதவி மேல்தான் மரியாதைன்னு எரிச்சலா இருக்கும்ல. அதே மாதிரிதான் பொண்ணுக்கும் அவளவிட அவ உடம்புதான் உலகத்துக்கு முக்கியம்னு ஆண்கள் உணர்த்தும் போது ரொம்ப எரிச்சலடைவாங்க” இது மாதிரியான அறிவை ஊட்டலாம்.
இந்த ஒன்றை தெரிந்து கொள்ளும் வகையில் எழுதபட்ட பத்திதான்.
பாலியல் சைக்கோக்களின் அயோக்கியத்தனத்துக்கு உளவியல் விளக்கம் சொல்லி காக்கும் பதிவு அல்ல.
”ஒரு பொண்ண Sexual objectfy பண்ணாத. உன் பார்வையில் கூட அந்த கவனம் இருக்கட்டும்” என்று ஒரு ஆணுக்கு விளக்கும் பதிவு.
No comments:
Post a Comment