Thursday, April 26, 2018

Mother

”நைட்டுக்கு கோதுமை தோசையும் தேங்காய் தொவயலும் ஒக்கேதான உங்களுக்கு” என்றார் மனைவி

“இது எனக்குப் பிடிச்ச மெனுதான. என்கிட்ட கேட்டுதான் செய்ற மாதிரி ஏன் ஸீன் போடுற” இது நான்

“ஹா ஹா வரும் போது தேங்காய் வாங்கிட்டு வந்திருங்க”

“நல்ல வேள இப்ப சொன்ன. கடைய கிராஸ் பண்ணப் போறேன். போன் வைய்யி” என்று

காய்கறிக்கடைய எட்டிப் பார்த்தேன்.

பிளாட்ஃபார்மில் நீண்டு கிடக்கும் காய்கறிக்கடை.

கடையின் அற்றத்தில் தேங்காய்கள். ஒரு தேங்காய் 24 ரூபாய் என்ற அளவில் பெரிய தேங்காயை எடுத்தேன்.

தேங்காய் தேர்வு செய்வதற்கு இரண்டு விஷயம் கவனிப்பேன். தேங்காயை கையில் எடுத்தவுடன் தேங்காய் வெயிட் இருக்க வேண்டும்.

அடுத்து தேங்காயைக் குலுக்கினால் நன்றாக நீர் குலுங்க வேண்டும்.

பலர் தேங்காயைத் தட்டிப் பார்ப்பார்கள். ஏன் தட்டிப் பார்க்கிறார்கள் என்றே தெரியாது.

தேங்காய் வாங்க வேண்டுமானால் சும்மா தட்டிப் பார்க்க வேண்டும் ஒரு தட்டு தட்டிப் பார்த்து விட்டு வாங்குவார்கள். ”இப்போது தட்டினதில் என்ன அப்சர்வ் பண்ணினாய்” என்று கேட்டால் தெரியாது. சும்மானாலும் தட்டுவான்கள்.

ஒரு தேங்காயை எடுத்து “ஒடச்சிக் கொடுத்திருங்க” என்றேன்.

கடையில் இருந்து ஒரு இளைஞன் தேங்காயை வாங்கிக் கொண்டு சென்றான்.

அவன் அதை உடைக்கும் போது வேறு எதாவது வாங்கலாமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

காராமணி என்று சொல்லப்படு பயத்தங்காய் ரொம்ப் இஷ்டம், எவ்வளவு விலையானாலும் வாங்கிவிடுவேன். அது இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை.

பீர்க்கங்காய் வாங்கலாமா, பாகற்காய் வாங்கலாமா என்று யோசித்து, சரி அப்புறம் பாத்துக்கலாம் என்று தேங்காய்க்கு காசு கொடுத்து, தேங்காயை உடைத்தானா இல்லையா என்று வந்தேன்.

அங்கே தேங்காயை உடைத்து அந்த நீரை ஒரு சிறிய காலி ஸ்பிரைட் கேனில் ஊற்றிக் கொண்டிருந்தான்.

அந்த கேனை ஒரு பெண் பிடித்துக் கொண்டிருந்தார்.

தேங்காயின் ஒனரான நான் இங்கு நிற்க தண்ணீரைப் பிடிப்பது பற்றியோ அல்லது பொது இடத்தில் இப்படி கேனை ஏந்தி நிற்கிறோமே என்றோ அந்தப் பெண் வெட்கப்பட்டது போல கேனைப் பிடித்துக் கொண்டிருந்தார்.

“தேங்காய்க்கு இருவது ருபாய்தான் கொடுப்பேன். நாலு ரூவாய அவுங்க கிட்ட வாங்கிக்கப்பா” என்றேன்.

அவர் சிரிக்க ஆரம்பித்தார். நானும் சிரித்தேன். தேங்காய் உடைத்தவனும் சிரித்தான்.

“இந்தப் பையன் தரையில வெச்சி உடைக்கிறேன்னு பாதிய தரையில கொட்டிட்டான்” என்று கேனை என்னிடம் காட்டினார்.

மூன்று மடக்கு நீர் அதில் இருந்தது. அதை எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டார்.

“யாருக்கு எடுத்துட்டுப் போறீங்க”

‘என் பையனுக்குதான்”

“என்ன வயசு “

“அஞ்சு நடக்குது. இது அவனுக்குப் பிடிக்கும்” என்று சொல்லி விடைபெற்றார்.

தேங்காய் உடைப்பதைப் பார்த்த உடன் பையனின் சுவையை உணர்ந்து, அந்த சுவையை திருப்திப்படுத்த இந்த தேங்காயில் இருக்கும் நீர் உதவும் என்று விநாடி நேரத்தில் யோசித்து, ஏதோ ஒரு வெட்கத்தை விட்டு, தண்ணீரை கேனில் ஏந்திக் கொள்ளும் அம்மா.

சமீபத்தில் அம்மாவைப் பார்க்கப் போகும் போது மாலை ஒரு பர்த்டே பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

வரும் போது ஒரு சமோசாவை டிஷ்யூ பேப்பரில் சுற்றி கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார்.

பல நூறு சமோசாக்களை வாங்கும் சக்தியை கொண்டவனாக என்னை வளர்த்துக் கொண்டது பற்றியெல்லாம் அம்மாவுக்கு தெரியாமலா இருக்கும்.

இருந்தாலும் விருந்தில் கொடுக்கும் சமோசாவை ஒரு பேப்பரில் சுற்றி வீட்டில் இருக்கும் ’எருமை மகனு’க்கு ஆசையாக கொண்டு வரும் இந்திய அம்மா.

இது பற்றியெல்லாம் தமிழில் யாராவது கவிதை எழுதியிருக்கார்களா என்று தெரியவில்லையே.

நாம கவிதையா எழுதலாம்னா எனக்கிருக்கும் மூளைச்சோம்பலில் எங்கே இதையெல்லாம் கவிதயையாய் எழுதுவது.

ஒருமாதிரி பின்னி பின்னி எழுத வேண்டும். எனக்கு செட் ஆகாது.

இப்படியெல்லம் இளநீர் வாங்கிப் போய் அந்த ஐந்து வயது ஆம்பிளைப் பையனை வளர்த்தாலும் அவன் வளரும் போதே அம்மாவை பணம் சம்பாதிப்பது அடிப்படையில்தான் பார்ப்பான்.

அவனைப் பொறுத்தவரை அம்மா எதுவும் செய்யாமல் ’நான் புரொடக்டிவ்வாக’ வீட்டில் இருப்பதாக நினைப்பான்.

அம்மாவை ஒரு முட்டாள் என்று நினைப்பான்.

ஒரு முட்டாளால் இப்படி தேங்காய்த் தண்ணீரை ரோட்டில் கேட்டு பெற்று நமக்கு வந்து ஊட்ட முடியுமா என்றெல்லாம் அவனுக்கு தோன்றாது.

அந்த சுரணையே அவனுக்கு இருக்காது.

நல்லவேளையாக நான் சிறுவயதிலேயே பாலகுமாரன் படித்தேன்.

மனிதர்களின் அடிப்படை உணர்வும் எண்ணமும் பற்றிய பார்வையை பெற்றுக் கொண்டேன்.

ஆனால் பையன் தன்னை கண்டுகொள்ளாதது பற்றியோ, தன்னை அங்கீகரிக்காதது பற்றியோ அம்மாக்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.

அலைந்து திரிந்து,இறக்கையை விரித்து, உணவை சேகரித்து, குஞ்சுகளின் வாயில் ஊட்டியபடியேதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment