இரு பையன்கள், ஒரு ஏரி ஓரமாகப் போய் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், பணக்கார வீட்டுப் பிள்ளை. மற்றவன் ஏழைச் சிறுவன். ஏரியோரத்தில், ஒரு ஜோடி செருப்புகள் இருப்பதை, இருவரும் பார்த்தனர். தூரத்தில், ஒரு விவசாயி, கை, கால் அலம்பிக் கொண்டிருப்பதையும் பார்த்தனர். உடனே, இருவரும் ஒரு வேடிக்கை செய்யத் தீர்மானித்தனர். பணக்கார பையன் சொன்னான்... "இந்தச் செருப்பை வீசியெறிந்து விடுவோம். விவசாயி வந்து பார்த்து, அங்குமிங்கும் ஓடித் தேடுவான். மிரள மிரள விழிப்பான். நமக்கு நல்ல வேடிக்கையாக இருக்கும்...' இப்படி சொல்லி, செருப்பைத் தூக்கி எறியப் போனான்.
ஏழை பையன் தடுத்து, "அப்பா... உனக்கு இப்படி ஒரு செருப்பு தொலைந்தால், உடனேயே வேறு செருப்பு வாங்க சக்தியுண்டு. அவனுக்கு இந்த செருப்பு தொலைந்து விட்டால், அவன் ஆயுட்காலம் முழுவதும் வெறும் காலில்தான் நடக்க வேண்டும். இதல்ல வேடிக்கை. நான் சொல்கிறேன் பாரு! முதலாவது செருப்பைக் கீழே வைத்தாயா? உன் ஜேப்பிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதன் மேலே வை. நாமிருவரும் அந்த மரத்தில் ஒளிந்து கொள்வோம். பார், என்ன வேடிக்கை நடக்கிறதென்று...' என்றான்.
இருவரும் ஒளிந்து கொள்ள, விவசாயி வந்து செருப்பை மாட்டிக் கொள்ளப் போக, அதிலே ஒரு ரூபாய் இருப்பதைப் பார்த்தான். எப்படி ரூபாய் வந்ததென்று திகைத்து, சுற்று முற்றும் பார்த்து, ஒருவரையும் காணாதபடியால், ஆண்டவன் தான் கொடுத்தான் என்று பணத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டு, கூப்பிய கரங்களுடன், "ஆண்டவனே, ஏழைக்கு இரங்கும் கருணாமூர்த்தி...' என்றான்.
ஏழைப் பையன், பணக்காரப் பையனை ஒரு இடி இடித்து, "பார்த்தாயா? உன்னைக் கருணாமூர்த்தி என் கிறான். நீ செருப்பைத் தூக்கி எறிந்திருந்தால் அவன் என்ன பாடுபட்டிருப்பான். இப்போ பாரு... அவனுக்கும் சந்தோஷம்; நமக்கும் ஆனந்தம். இப்படித்தான் வேடிக்கை செய்ய வேண்டும்...' என்று சொல்ல சிரித்துக் கொண்டே போயினர்.
Saturday, May 19, 2018
Two friends
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment