ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.
ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.
ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.
வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.
அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.
தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..
ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.
அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.
அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.
உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.
பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.
வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.
ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.
அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.
உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.
உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...
1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.
நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.
வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.
(படித்ததில் பிடித்தது)
No comments:
Post a Comment