Monday, February 8, 2021

#நேர்மையும் #விசுவாசமும்

#நேர்மையும் #விசுவாசமும்

'இரண்டும் ஒன்று தானே' என்று தோன்றலாம்.

ஒரு நகைக் கடை, நீங்களும் நானும் அங்கே நகை வாங்கச் செல்கிறோம். 

கடை முதலாளி பார்க்காத நேரம், நீங்கள் ஒரு மோதிரத்தை "எடுத்து பதுக்கி"-விட்டீர்கள் எனக் கொள்வோம் (ஒரு உதாரணம் தான்).

கடையில் இருக்கும் 'நேர்மையான' ஊழியர் ஒருவர், இதனைப் பார்த்து, முதலாளியிடம் சொல்லிவிட்டார். 

ஆக, அவர் சம்பளம் வாங்குகிற முதலாளிக்கு 'விசுவாசமாக' இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். 
----
மற்றொரு நாள், அதே முதலாளி, மற்றொரு வாடிக்கையாளரிடம், 2 பவுன் நகைக்கு காசு வாங்கிவிட்டு, ஒரு பவுன் நகையில், செம்பு கலந்து ஏமாற்றிவிடுகிறார் எனக் கொள்ளலாம். 

இப்போது அதே ஊழியர், முதலாளியின் இந்த செயலைக் கண்டிக்காமல், உங்களிடமும் சொல்லாமல் லாவகமாக நகர்கிறார் என்றால், அவர் மீண்டும் தனது விசுவாசத்தை நிறுவுகிறார். 

அதாவது சம்பளம் கொடுத்த முதலாளிக்கு நன்றியோடு கடக்கிறார், என்று பொருள். என்றால், அவர் நேர்மையாளரா? 

எனவே, நேர்மை என்பதும் விசுவாசம் என்பதும் ஒன்றல்ல.

அதே ஊழியர், ஏமாற்றப்பட்ட உங்களிடம் வந்து, "இறைவனை வழிபடுங்கள், வாழ்வின் எல்லா தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் அவரே தீர்வு" என்றோ,

"அகிம்சை தான் வாழ்வின் இன்பத்திற்கான ஒரே மந்திரம்" என்றோ,

"நாமெல்லாம் இந்நாட்டு மன்னர், பிரித்து பார்க்க வேண்டாம்" என்றோ,

கூறுகிறார் என்றால், அவர் விசுவாசி மட்டுமல்ல, அந்த முதலாளியால் ஏவப்பட்ட கைக்கூலியும் கூட. 

ஏனென்றால் அவர் முதலாளியின் வெற்றிக்காக, விசுவாசத்தைக் கடந்து, ஒரு படி மேலே உழைக்கிறார்.  

அதாவது, நேர்மையாளன் தனது தலைமைக்கு ஏக விசுவாசியாக இருக்க முயல மாட்டான். 

ஒரு தலைமைக்கு ஏக விசுவாசியாக இருப்பவன் ஒரு போதும் நேர்மையாளனாக இருக்க மாட்டான். 

"ஏகன் இறைவன்" என்று ஏமாறுபவனிடம் கூறுபவன் ஒரு போதும், நேர்மையாளனாகவோ, கடவுள் தூதனாகவோ, தலைவனாகவோ இருக்க முடியாது.

சமூகத்தின் பொது புத்தியில் தலைவனாக நிறுவப்பட்ட பலர், அதிகாரத்தின் ஊழியர்கள், அரசின் செல்லப் பிராணிகள். 

அவர்களிடம் விசுவாசம் வழிந்து ஓடும். ஆனால் நேர்மை ஒரு போதும் இருக்காது.

புரிந்து புறக்கணிப்பது தான் அறிவு.

#சச்சின்
#ரஜினி
#சில்லறை

No comments:

Post a Comment