ஆத்திசூடியில் இதற்குப் பொருள் தெரியுமா ?
**
நம் அனைவர்க்கும் ஆத்திசூடி மனப்பாடமாகத் தெரியும். அதன் கருத்துகளும் நாமறிந்ததே. ஆனால் ஆத்திசூடியிலும் நமக்குப் பொருள் ஐயம் ஏற்படுத்தும் அடிகளும் இருக்கின்றன. தற்செயலாக அதனைப் படிக்கும்போது இதற்கு என்ன பொருள் என்ற குழப்பம் வரலாம்.
அறம்செய விரும்பு என்பது பொருளறிந்த ஒன்று. ஆறுவது சினம் என்றால் தெரியும். இயல்வது கரவேல் என்றால் சிலர்க்குத் தெரியாது.
பலர்க்கும் பொருள் தெரியாத ஆத்திசூடியின் தொடர்களைப் பார்ப்போம்.
இயல்வது கரவேல் – கரத்தல் என்றால் மறைத்தல், ஒளித்தல் என்று பொருள். இயல்வது என்றால் நம்மால் முடிவது. இல்லாதவர்க்கு உன்னால் உதவக்கூடிய ஒன்றைத் தராமல் மறைத்து வைக்காதே.
ஐயம் இட்டு உண் – ஐயம் என்றால் பிச்சை. சோறில்லாமல் இரந்து நிற்பவர்க்கு உணவளித்துவிட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு – ஒப்புரவு என்றால் உலக வழக்கம். நாட்டு நடைமுறை. ஒழுகுதல் என்றால் அதன்வழி நடத்தல். உலக வழக்கத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்.
ஔவியம் பேசேல் – ஔவியம் என்றால் பொறாமை. பொறாமைப்பட்டுப் பேசாதீர். (ஔவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - குறள்)
அஃகம் சுருக்கேல் – அஃகம் என்றால் தானியம். நெல், கேழ்வரகு, தினை, சாமை போன்றவை அஃகங்கள். அவற்றைத் தரும்போதும் விற்கும்போது அளவு குறைக்கவே கூடாது. கூடுதலாகத்தான் வழங்க வேண்டும்.
ஙப்போல் வளை – தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தேழு. அவற்றில் ஙகர வரிசை எழுத்துகளில் ங், ங ஆகிய இரண்டு எழுத்துகளைத் தவிர பிறவற்றுக்குப் பயன்பாடில்லை. அதற்காக ஙகர வரிசை எழுத்துகளைப் புறந்தள்ளவில்லை. பட்டியலில் அவையும் இருக்கின்றன. அதனைப்போல பயனில்லை என்பதற்காக நமக்கு வேண்டியவர்களைத் தவிர்க்கக் கூடாது. அணைத்துச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கிழமைப்பட வாழ் – கிழமை என்றால் உறவும் உரிமையும் சேர்ந்த தொடர்பு. ஒருவர் உன்னை உறவாகக் கருதி உரிமையோடு அணுகும்படி வாழ்.
கோதாட்டொழி – கோது என்றால் நெறிதவறல். குற்றமான செய்கை. கோதாட்டு என்றால் நெறிதவறிய செயல்கள். அவற்றை விட்டொழி.
கௌவை அகற்று – கௌவை என்றால் துன்பம். துன்பத்தை முதலில் அகற்று.
நுண்மை நுகரேல் – நுண்மை என்பதற்கு நோய்தரும் சிற்றுண்டி உணவு என்பது பொருள். அவற்றினை உண்ணாதே.
நைவினை நணுகேல் – துணி நைந்துவிட்டது என்கிறோம். நைதல் என்றால் அழிதல். நணுகுதல் என்றால் சார்ந்திருப்பது. அழிவுச் செயலைச் சார்ந்து வாழாதே.
வாதுமுற்கூறேல் – வாதத்தில் ஈடுபடுகையில் தன்னுடையதை முந்திச் சொல்லக் கூடாது. பிறர் கூறுவதைக் கேட்டு அதற்கேற்ப நம் கருத்தினைக் கூறல் வேண்டும்.
ஒன்னாரைத் தேறேல் – ஒன்னார் என்றால் பகைவர். தேறுதல் என்றால் நம்புதல். பகைவருடைய சொற்களை நம்பாதே.
- கவிஞர் மகுடேசுவரன்
No comments:
Post a Comment