கொடிவேரி அணை-ஒரு ஆச்சரியம்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பவானிசாகர் அணைக்கட்டில் இருபதடி உயரத்திற்கு சேரும் சகதியும் நிரம்பியிருக்கிறது. மிக அதிகமாக நீர்வரத்து இருக்கும் போது அந்த இருபதடி நீரை தேக்கிவைக் முடிவதில்லை,ஆனால் இன்றைக்கு சுமாராக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர்,இப்போது இருப்பதைப்போல் எந்தவிதமான நவீன சக்திவாய்ந்த எந்திரங்களும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில்,அணை தன்னைத்தானே தூர்வாரும் நுட்பத்தை நமது முன்னோர்கள் கொடிவேரி அணைக்கடில் செய்திருக்கிறார்கள்.என்பது மிக வியப்பான ஒன்று அந்த அறிவும் தொழில்நுட்பமும் வளராமல் இன்றைக்கு ஏன் தேய்ந்தது என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும்!!!...
நீர் மேலாண்மையில் நம்ம ஆட்களை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை எனச் சொல்லலாம். மனித ஆற்றலைக்கொண்டே,மணல்போக்கி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீர் குவிகின்ற மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் இருபதடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்திற்குள் கற்களால் ஆன நுட்பமான சல்லடை போன்ற அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டு, மணலும்,சகதியும் அணையினுள் தேங்கி விடாதவாறு உருவாக்கி,இந்த மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது...
இந்த மணல்போக்கிகளின் வேலை என்னவென்றால் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து அணைக்கு வெளிப்பக்கமாக சுரங்கத்தின் துவாரம் வழியாக வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனிச்சிறப்பான தொழில்நுட்பம். இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்திருக்கிறது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் சிறப்பான நுட்பம் மிகுந்த கட்டுமான அமைப்பு இது....
சுற்றுச்சூழலை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், முழுக்க முழுக்க மனித ஆற்றலைக்கொண்டே,சற்று தொலைவிலுள்ள கடம்பூர் மலைப் பகுதியில் இருந்து கற்களைக்கொண்டுவந்து மிகத்தெளிவாக உறுதியாக கட்டி முடித்திருக்கும் திறமையை எப்படித்தான் வியப்பது !!!...
நேர்த்தியான நீர்மேலாண்மையை கையாண்டு ஆற்றின் போக்கிலேயே அணக்கு வடக்குப்பக்கம் அரக்கன்கோட்டை கால்வாயும்,தென்புறம் தடப்பள்ளி கால்வயையும் அமைத்து பாசனத்தில் எஞ்சிய கழிவுநீர் மீண்டும் வடிந்து ஆற்றிற்கே வருகின்ற வகையில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்...
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. குடிப்போர்களின் சொர்க்க பூமியாக மாறியிருக்கிறது.கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்தியிருகிறார்கள். காலி பாட்டில்களை அணைக்குள் எறிந்திருக்கிறார்கள்.கொஞ்சநாட்களுக்கு முன்பெல்லாம் தீவிரமாக நடந்தது இதுவெல்லாம்.இப்போதைக்கு கொஞ்சம் பரவாயில்லை.அப்போது குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு மூடியே விட்டார்கள்...
அருமையான தொழில்நுட்பத்தை மண்ணைப்போட்டு மூடி இன்றைக்கு மணலும் சகதியும் சேர்ந்து மேடாகி அணைக்குள் பெரும்பாலான இடத்தை செடிகள் ஆக்கிரமித்திருக்கிறது.குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக நவீன சமூகத்திடம் சிக்கித் தவிக்கின்றன நமது முன்னோர்களின் அணைகள்!
இது எங்கே இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு,பல சினிமாப் படங்களில் பார்த்திருக்கலாம்.ஈரோடு-கோபிச்செட்டிபாளையத்திலிருத்து சத்தியமங்கலம் செல்லும் பாதையில் இந்தக் கொடிவேரி அணை அமைந்திருக்கிறது. திருப்பூரிலிருத்து வருபவர்கள் பெருமாநல்லூர்,நம்பியூர்,குருமந்தூர் வழியாக கொடிவேரியை அடையலாம்...
விடுமுறை நாட்களில் ஒருநாளை இங்கு சுகமான குளியலுடன் கழிக்கலாம்.இந்தமாதிரி சுற்றுலா இடங்களுக்கேயுண்டான ஆயில் மசாஜ் மற்றும் அங்குள்ள மக்களால் ஆற்றின் ஓரமாக நடத்தப்படும் தற்காலிக மீன்வறுவல், சாப்பாட்டுக்கடைகள் போன்றவையும் உண்டு.ஆசைதீரக்குளித்துவிட்டு பூங்காவில் குழந்தைகளுடன் நாளைக்கழித்துவிட்டு வரலாம்.தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை,கவர்களை எடுத்துச்செல்ல வேண்டாம்....
சூழலியல் ஆவலுடன்,
Ramamurthi Ram
https://raramamurthiram.blogspot.in/2017/07/blog-post_8.html?m=1
No comments:
Post a Comment