Friday, September 8, 2017

உளவியல்

ஒரு நிமிடக் கதை: உளவியல்

உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த குருமூர்த்தி குழந்தைகள் கையில் பழங்களைக் கொடுத்தபடி மனைவி வித்யாவை அழைத்தான்.

“வித்யா! 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல புதிய வேலை கிடைச்சிருக்கு. இனியும் இந்த பாவப்பட்ட ஜனங்க வசிக்கிற இடத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. கொஞ்சம் வசதியானவங்க இருக்கிற இடத்துக்கு மாறிடலாம்னு தீர்மானிச்சுட்டேன்” – உற்சாகமாய்ச் சொன்னான் குருமூர்த்தி.

“10 வருஷமா இங்கதானே இருக்கோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?” –வித்யா புருவத்தைச் சுருக்கியபடி கேட்டாள்.

“அடுத்த வாரமே கார் வாங்கப்போறேன். குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்துக்கு மாத்தணும். அதுக்கெல்லாம் இந்த இடம் சரிப்பட்டு வராது!”

“இந்த வீட்லயும் கார் நிறுத்தலாமே. நல்ல பள்ளிக்கூடமும் பக்கத்துலயே இருக்குதே.”

“என்ன புரியாம பேசுறே வித்யா? நான் சொல்றதுல பெரிய உளவியல் இருக்குது! வசதியானவங்க இருக்கிற இடத்துக்குப் போனா அவங்களைப் பார்த்து நாம வாழ்க்கையில உயரணும்னு தோணும். இன்னும் கஷ்டப்பட்டு முன்னேறணும்னு ஒரு உந்துதல் வரும். ஏதோ வருமானம் குறைவா இருந்தப்போ இங்க இருந்தோம். இனியும் இந்த ஜனங்களோட சேர்ந்து வாழணுமா?”

“ஒருவகையில நீங்க சொல்ற உளவியல் சரியா இருக்கலாம். நீங்க சொல்றதையே இந்த பாவப்பட்ட ஜனங்க கோணத்துல இருந்து பாருங்க. இவங்க மத்தியில நாம வசதியா மாறுகிறப்போ நம்மளைப் பார்க்கிற இந்த மக்களுக்கும் முன்னேறணும்னு ஆசை வரும்தானே! நான் சொல்றதுலயும் உளவியல் இருக்கத்தானே செய்யுது?”

வித்யா கேட்ட கேள்வி குருமூர்த்திக்குள் நல்லதொரு உளவியலாய் வேலை செய்ய ஆரம்பித்தது.

No comments:

Post a Comment