Tuesday, March 27, 2018

Parisu

இன்று காலை என் வீட்டின் அருகில் ஒரு காட்சி.
ஒரு மூதாட்டி காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியை ஒரு சிறுவன் உற்று பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவர் அருகில் சென்ற சிறுவன் பாட்டி இந்தாங்க இந்த காச வச்சுக்கோங்க என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். அதற்க்கு அந்த பாட்டி காசெல்லாம் வேனா ராசா ஏதாது வாங்கிக்கோனு என்று பதில் சொல்ல அந்த சிறுவன் ஏதோ யோசித்துக் கொண்டே இருந்தான். சற்று நேரம் கழிந்த பின் பாட்டி எனக்கு ஒரு முத்தம் தா என்று கேட்க்க சற்றும் யோசிக்காமல் அந்த பாட்டி அந்த மழலையின் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டார். அந்த சிறுவன் மறுபடியும் அவரிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். வேணாம் ராசா ஏதாது வங்கிக்கோனு சொல்ல அந்த சிறுவன் அதான் உனிடம் இருந்து முத்தத்தை வாங்கிவிட்டேனே என்றான். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாட்டி அந்த சிறுவனை கட்டி அனைத்து சிறு துளி கண்ணீர் சிந்தினார்.
அந்த சிறுவன் தந்தது முத்தத்திற்கு தந்தபரிசு அல்ல அது அந்த பாட்டி தந்த பாசத்திர்க்கான பரிசு.
- நந்த மீனாள்.
சிந்தனை சிறப்பி.

Monday, March 19, 2018

Mind blowing stories

நான் வேலைக்கு போறேன்..என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா - வாட்ஸ் அப்பில் பரவிவரும் நெஞ்சை தொடும் உரையாடல் !

''நான் வேலைக்கு போறேன்...

என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!''

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.

நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

ம்... காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

''ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

- இது வாட்ஸ்ஆப் மூலமாக பரவிக் கொண்டிருக்கும் நெஞ்சைத் தொடும் ஒரு பதிவு.

Tuesday, March 13, 2018

For health

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும்.  இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

4. தினசரி நான்கு `கப்’ காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.

6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.

8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.

10. சாதாரணமாக குளிர்பானஙகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்’ குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.

12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.

13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

14. மதுபானம் அருநதும் வழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நிறுத்த வேண்டும்.

15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.

16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.

19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.

20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

21. பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

Tuesday, March 6, 2018

Family first

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.

இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.

இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.

உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை
‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.

சிறுவன் திரும்பினான். சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.

‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.

இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்… சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.

சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல. ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. எனவே தான் ஏழைகளால் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்த அளவுக்கு பணக்காரர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.
அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.

Monday, March 5, 2018

Good story

Good Story 😂😂😂

*இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும்...!*

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

*நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!*

Friday, March 2, 2018

Sinaithangi

முதலிரவு முடிந்ததுமே
முகமெல்லாம் மலர்ந்தவனாய்
'அப்பா' ஆகிவிட
ஆவலுடன் காத்திருப்பான்.
அவளுடைய அடிவயிற்றை
நாள்தோறும் வருடிவிட்டு,
எப்போது என்குழந்தை
இவ்வுலகு வருமென்பான்?
உண்மையில் அவன் ஆசை
அவளைவிட பேராசை.
அவள் ஆசைப்படுவதெல்லாம்
அழகாய் கொடுத்திடுவான்.
தாயாகிப் படுகின்ற
அவள்அவஸ்தை பார்ப்பதனால்
தன்னெஞ்சே வெடிப்பதுபோல்
தனிமையிலே அழுதிடுவான்.
சுகமாகப் பிரசவித்தால்
கொஞ்சமாக அழுதிடுவான்.
சீசரில் பிரசவித்தால் - அவள்
வலி தீர அழுதிடுவான்.
பெண்களுக்கு கண் குளத்தில்
வழியவழிய நீரிருக்கும்.
ஆண்களுக்கு அதுகொஞ்சம்
ஆழமாகப் போயிருக்கும்.
ஆணழுதால் மீன்போல
யாருக்கும் தெரிவதில்லை.
பெண்ணழுதால் பிடித்துவைக்கப்
பாத்திரங்கள் போதவில்லை.
அவள் முகத்தை தன்மார்பில்
தான் அணைத்துத் தாயாவான்.
அவள் வலியைத் தான் கொஞ்சம்
கடன் வாங்கி வைத்திருப்பான்.
குழந்தையைத் தோள்மீதும்
மனைவியைத் தன்மீதும்
சுமக்கின்ற சுமைதாங்கி
'அவன்' என்றால் அது மிகையல்ல !!

Madai

மடை >> மடையர்கள்
--------------------------------

ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் “மடை”
மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் “மடையர்கள்” என அழைக்கப்பட்டார்கள்.

வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா? எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?

இனி எந்த ஒரு மாணவனையாவது “மடையா” என்று அழைப்பது எனக்குச் சற்று மனநாணம் தான்..
உங்களுக்கு ??,

-பேராசிரியர் தொ.பரமசிவன்