வெண்டைக்காய்... வெற்றிகரமான மகசூல் சூத்திரங்கள்!
‘கண்ட கிராணி கடிய அதிசாரம்
விண்டவெண் சீதரத்தம் மேவுங்கான் -ஒண்டொடியே!
வண்டற்காம் வெய்யகப வாதமிகும் வாய்க்குணவாம்
வெண்டைக்காய் உண்பார்க்கு விள்’ என்கிறது ஒரு மருத்துவப்பாடல்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து உண்டால்... சீதபேதி, ரத்தக்கழிச்சல், வயிற்றுக்கோளாறுகள், கபம், வாயு தொடர்பான நோய்கள் குணமாகும் என்பது இப்பாடலின் பொருள். சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது, வெண்டைக்காய். இதில் உள்ள செறிவூட்டப்பட்ட நார்சத்து மற்றும் புரதம் ஆகியவை பல்வேறு அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் கொண்டவை. இத்தனை விஷயங்களை உள்ளடக்கிய வெண்டைக்காய், விவசாயிகளுக்குப் போதுமான வருமானத்தைக் கொடுக்கக்கூடிய பயிராகவும் இருக்கிறது.
ஒவ்வொரு பயிருக்கும் சில பிரத்யேகக் குணங்கள், பருவம் ஆகியவை உண்டு. மேலும், பூச்சி மற்றும் நோய்களும் பயிருக்குப்பயிர் வேறுபடும். அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சாகுபடி செய்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில், வெண்டைக்காய்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்துச் சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் சொன்ன தகவல்கள் இங்கே...
‘‘வெண்டைக்காய்ச் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் சிறந்தது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யலாம். பிப்ரவரி-மார்ச் மாதங்களிலும் நடவு செய்யலாம். நீர் தேங்காத வடிகால் வசதியுள்ள நிலங்கள் வெண்டைக்காய்ச் சாகுபடிக்கு ஏற்றவை. செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். களிமண் நிலங்களில் சரியாக வளராது. கரிசல் மண் நிலங்களில் ஓரளவுக்கு வளரும்.
வெண்டைக்காய்ச் சாகுபடியில், விதைத்தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். இலை மஞ்சள் நச்சுயிரி நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்ட விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த நோய், வெண்டைக்காயில், 25 சதவிகிதம் முதல் 40 சதவிகித அளவு வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. வெண்டைக்காயில் மதுரை-1 மற்றும் கோ-3 என்ற ரகங்களும், கோ.பி.எச்-1 (COBH-1), கோ.பி.எச்-3, கோ-4 ஆகிய கலப்பின ரகங்களும் உள்ளன. இவை தவிர, தனியார் நிறுவனங்கள் பல்வேறு வீரிய விதைகளைச் சந்தைப்படுத்துகின்றன.
மதுரை-1 ரகம் ஒரு ஹெக்டேர் பரப்பில், சராசரியாக 12 டன் அளவு மகசூல் கொடுக்கக்கூடியது. கோ-3 ரகம் சராசரியாக 15 டன் அளவு மகசூல் கொடுக்கக்கூடியது. கோ.பி.எச்-1, கோ.பி.எச்-3, கோ-4 ஆகிய கலப்பின ரகங்கள் முறையே... 22 டன், 25-29 டன், 25 டன் என்ற அளவில் சராசரி மகசூல் கொடுக்கக்கூடியவை. அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற வெண்டைக்காய் ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
எந்த விதையாக இருந்தாலும் விதைக்கும் முன்பாக விதைநேர்த்தி செய்வது அவசியம். பல விவசாயிகள் விதைநேர்த்தி செய்வதேயில்லை. முறையாக விதைநேர்த்தி செய்து விதைத்தால், பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்பட்டு விடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விதைநேர்த்தி :
நாட்டு ரக விதைகளாக இருந்தால் ஒரு ஹெக்டேர் (2.47 ஏக்கர்) பரப்பில் விதைக்க 8 கிலோ விதை தேவை. கலப்பின ரகங்களாக இருந்தால் இரண்டரை கிலோ போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து பிசைந்துகொள்ள வேண்டும். அரிசி வடித்த கஞ்சியில் இந்த விதைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து ஊறவிட்டு எடுத்து, நிழலில் உலர்த்த வேண்டும். ஈரம் முழுவதும் காய்வதற்கு முன்பு, ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் என்ற அளவில் அசோஸ் ஸ்பைரில்லம் கலந்து பிசைந்து, அரைமணி நேரம் நிழலில் உலர வைத்து எடுத்து விதைக்க வேண்டும்.
நிலம் தயாரிப்பு :
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹெக்டேர் நிலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்பாக, 25 டன் மட்கிய மாட்டுச்சாணம், 250 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைத் தூவி உழவு செய்ய வேண்டும். மண்ணுக்குள் உள்ள பூச்சிகளை வேப்பம் பிண்ணாக்கு அழித்துவிடும். மேலும், வேர் அழுகல் பிரச்னையும் தடுக்கப்படும். பிறகு வசதிக்கு ஏற்ப பார்களை அமைத்துக் கொள்ளலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகச் சாகுபடி செய்பவர்கள் மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ளலாம்.
பிறகு நிலத்தை ஈரப்படுத்தி... வரிசைக்கு வரிசை இரண்டு அடி, செடிக்குச் செடிக்கு ஒன்றரை அடி இடைவெளியில்... ஒரு குச்சி கொண்டு மண்ணை லேசாகப் பறித்துப் பள்ளம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மூன்று விதைகளை விதைத்து, மண் கொண்டு மூட வேண்டும். விதைத்த 3-ம் நாள் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்து வர வேண்டும். நடவு செய்ததிலிருந்து 30 நாள்கள் வரை, ஒரு செடிக்குத் தினமும் 2.4 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். 30-ம் நாளுக்கு மேல் அறுவடை முடியும் வரை, ஒரு செடிக்குத் தினமும் 7.2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும். பத்து நாள்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள இரண்டு செடிகளை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் களை எடுக்க வேண்டும். வெண்டைக்காய் வயலைக் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தற்காப்பு நடவடிக்கைகள், பூச்சி-நோய் மேலாண்மை குறித்து அடுத்த இதழில்...
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காய் :
வெண்டைக்காயில் உள்ள செறிவூட்டப்பட்ட நார்சத்து மற்றும் புரதம் ஆகியவை உடலுக்கு மிகவும் அவசியமானவை. மற்ற காய்கறிகளில் உள்ள புரதங்களை, உடல் அப்படியே ஏற்றுக்கொள்ளாது. ஆனால், இக்காயில் உள்ள புரதத்தை உடல் அப்படியே ஏற்றுக்கொள்ளும். வெண்டைக்காய்ச் சாப்பிட்டால் மூளை வளரும் என்று சொல்வார்கள். அறிவியல் ரீதியாக... இக்காயில் உள்ள புரதம், செறிவூட்டப்பட்ட நார்சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மூன்றும் ஞாபகசக்தியைக் கொடுக்கக்கூடியவை.
ஆகவே சத்துகள் அடிப்படையில்தான், இதைச் சாப்பிட்டால் மூளை வளரும் என்கிறார்கள். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெண்டைக்காய் குறைக்கும் என்பதால், தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், இதயம் தொடர்பான பிரச்னைகளைப் பெருமளவு தவிர்க்கலாம். அதேபோல் வெண்டைக்காய் நமது உடலில் பீட்டா திசுக்களைத் தூண்டிவிடும். அதனால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புக் குறைவு.
வெண்டைக்காயை முற்றிய பிறகு சாப்பிடக்கூடாது. முற்றிய காயில் முக்கியமான சத்துகளான நார்சத்து, புரதம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவு மாறுபடும். அதனால், நாம் எதிர்பார்க்கும் சத்துகள் உடம்புக்குக் கிடைக்காது. எனவே பிஞ்சு பருவத்தில் உள்ள வெண்டைக்காயைத்தான் உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். முற்றிய காயில் சத்துகள் அனைத்தும் விதையில்தான் சேகரமாகியிருக்கும்.
வெண்டைக்காய் விதைகளை நிழலில் காய வைத்து, அரைத்துப் பொடியாக்கி, அதைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து ‘காபி’போலப் பருகலாம். இதைப் பருகுவதால், நீர்க்கடுப்பு, எரிச்சல் ஆகியவை குறையும். பிராஸ்டேட் வளர்ச்சி தடுக்கப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
வெண்டைக்காய் ஃபேசியல் :
வெண்டைக்காயின் தாயகம் எத்தியோப்பியா. எத்தியோப்பியர்களின் விருப்ப உணவு, வெண்டைக்காய். உலக அழகி கிளியோபாட்ராவின் விருப்ப உணவும் வெண்டைக்காய்தான்.
இது பிசுபிசுப்புத் தன்மை கொண்டிருப்பதால், இதை ‘ஃபேசியல்’ செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள், எத்தியோப்பியர்கள் இதனைப் பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கொப்பளங்கள் மறைகின்றன.
தொடர்புக்கு :
முனைவர் செந்தூர்குமரன்,
செல்போன்: 94438 69408
Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm