Sunday, June 12, 2016

A person died

இராமன் என்பவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும்  உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர், அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இராமனின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..
”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இராமன் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
.
ஆம்..! பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.
எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு..!
.
நாம் யார் அதைக் குறை சொல்ல..? கேள்வி கேட்க..?
.
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.

Monday, June 6, 2016

Karma

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!

அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்! அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!

குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!

குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “

நாம் அடுத்தவர்கள் மேல்  நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள்  நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்! மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே  எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் !!