அமெரிக்கா வந்தபின் தான் நெட் ஒர்க்கிங் (Networking) என ஒன்று இருப்பதை கண்டுபிடித்தேன்.
நாம தொழில்ரீதியா முன்னேறணும் என்றால் நம் நெட் ஒர்க்கில் நம் துறை சார்ந்த பெரும்புள்ளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திகொள்வதுதான் நெட் ஒர்க்கிங். அதுக்குன்னு பார்ட்டிகள், டின்னர், லின்க்ட் இன் (linkedin) என பல வழிமுறைகள் உண்டு.
சரின்னு அப்படி சில நெட் ஒர்க்கிங் நிகழ்வுகளுக்கு போனேன். போனபோது அதெல்லாம் நல்லா சிரிச்சு, பேசி, பழக தெரிந்தவர்களுக்கான ஆட்டம் என புரிந்தது.
எனக்கு இம்மாதிரி அபிசியல் விருந்து, டின்னர், பார்ட்டின்னா எப்படா வீட்டுக்கு வருவோம்னு இருக்கும். கடைசியில் என்னை சோஷியல் அவுட்காஸ்ட் (social outcast) என சொல்லும் அளவு இம்மாதிரி நிகழ்வுகளில் யாரும் கண்டுக்காத ஆளாகிவிட்டேன். ஒரே காரணம் எனக்கு அதிகமாக மக்களுடன் பேச, பழக தெரியாது.
அதன்பின் தான் சைக்கலாஜிக்கலாக இண்ட்ரோவெர்ட், எக்ஸ்ட்ரோவெர்ட் (Introvert, Extrovert) என இரு வகைகள் இருப்பதை அறிந்தேன். இண்ட்ரோவெர்ட்டுகளுக்கு பார்ட்டிகள், விருந்துகள் சுத்தமாக பிடிக்காது. அவர்கள் தனிமை விரும்பிகள். என் பொழுதுபோக்கு எல்லாமே படிப்பது, எழுதுவது, பாடிபில்டிங், சமையல் என தனியாக இருந்து செய்யும் விசயமே. என்னை போல சக இண்ட்ரோவெர்ட்டுகள் யாரெனில் ஒபாமா, ஐன்ஸ்டைன், ராமானுஜன், ஸ்பீல்பெர்க் ஆகியோரை கூறலாம்.
எக்ஸ்ட்ரோவெர்ட்டுகள் (பில் க்ளின்டன், டொனால்டு டிரம்ப்) ஆகியோர் மக்களிடையே மிக பிரபலமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இன்ட்ரோவெர்ட்டுகள் கணிதம், அறிவியல், விஞ்ஞானம், ஆராய்ச்சி ஆகிய தனியாக செய்யகூடிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
எக்ஸ்ட்ரோவெர்ட்டுகள் மிகபெரிய தலைவர்களாக, காந்த சக்தி கொண்டவர்களாக, ஊடகங்களில், தலைமை பொறுப்புக்களில் பிரகாசிப்பார்கள்.
இதை ஆராய்ந்து தெரிந்து கொண்டபின் பார்ட்டிகளில் ஒதுங்கியிருப்பதும், நெட் ஒர்க்கிங் செய்ய தெரியாததும் என் குற்றம் அல்ல என புரிந்துவிட்டது.
இண்டோர்வெர்ட்டுகளை "உம்மனா மூஞ்சி, பேச தெரியாதவன்" என இன்சல்ட் செய்து அவர்களை பிறருடன் பேச, பழக வைக்க பெரியவர்கள் முயல்வார்கள். அதெல்லாம் தப்பு. என்னை சின்ன வயதில் அப்படி நிறைய பேருடன் பேச, பழக வைக்க என் அப்பா முயன்றுள்ளார். நான் முயற்சி செய்தும் அதெல்லாம் என்னால் செய்ய முடிந்ததில்லை.
இன்ட்ரோவெர்ட்டுகளின் இன்னொரு தன்மை என்னவெனில் அவர்கள் எப்போதும் தனக்கென ஒரு தனி உலகம் அமைத்து அதில் சஞ்சரிப்பார்கள். பல சமயம் நாம் அவர்களிடம் ஒன்று சொல்ல, அவர்கள் வேறு எதையோ நினைத்து கொண்டிருப்பார்கள். பலமுறை இதனால் மளிகை சாமான் லிஸ்டை மறந்தும், உப்பு வாங்க சொன்னால் பருப்பு வாங்கிவருவது போன்றவற்றை செய்து வீட்டில் இப்போதும் செமத்தியான டோஸ் வாங்கி கட்டிகொண்டுள்ளேன்.
என் கற்பனை உலகில் சஞ்சரித்துதான் நான் பி.எச்.டி முடித்தேன். பேலியோ முதல் பாடிபில்டிங் வரை மனதில் அந்தந்த சமயம் எனக்கென ஒரு தனி உலகம் அமைத்து அதிலேயே வாழ்ந்து வருவேன்.
இப்படி என்னை நன்றாக அனலைஸ் செய்தபின் தான் நான் இன்னொரு உண்மையை உணர்ந்தேன்.
நான் மட்டுமே இண்டோர்வெர்ட் அல்லவே? பார்ட்டிகளில் என்னை போல பிற இண்ட்ரோவெர்ட்டுகள் இருப்பார்களே என யோசித்தேன்.
அதன்பின் பார்ட்டிகளில் ஒதுக்குபுறமாக சோபாவில் அமர்ந்து திரு, திரு என முழித்து கொண்டிருக்கும், செல்போனை பார்க்கும் பிற இண்ட்ரோவெர்ட்டுகளை கண்டுபிடித்தேன்.
எக்ஸ்ட்ரோவெர்ட்டுகள் பார்ட்டிகளில் மையநாயகமாக இருப்பார்கள். அவர்களை சுற்றி பெரும்கூட்டம் இருக்கும். இண்ட்ரோவெர்ட்டுகள் கூச்ச சுபாவத்துடன் ஒதுங்கி இருப்பார்கள்.
அதன்பின் பார்ட்டிகளில் எக்ஸ்ட்ரோவெர்ட்டுகளை ஒதுக்கி இண்டோர்ர்வெர்ட்டுகளுடன் பழக ஆரம்பித்தேன். அது மிக எளிது. தனியாக அனாதையாக அமர்ந்திருப்பவர்களிடம் போய் சும்மா பக்கத்தில் உட்கார்ந்தாலே போதும். ஒரு சம்பிரதாய ஹலோவுக்கு பின் பல நிமிடம் கனத்த மவுனம் நீடிக்கும். அவர்களுக்கு "இவன் ஏன் இங்கே வந்து உட்கார்ந்தான்" என்பது போல அவஸ்தையாக இருக்கும்.
அதன்பின் மெதுவாக அவர்களை பேசவிடுவேன். ஒவ்வொரு இண்ட்ரோவெர்ட்டுக்கும் ஒரு தனி உலகம் இருக்குமே? அதை பற்றி பேசவிடுவேன். என்னிடம் யாராவது வந்து பேலியோ, பாடிபில்டிங் என பேசினால் எத்தனை உற்சாகத்துடன் பேசுவேன்? ஆக அவர்களின் அதுபோன்ற உலகை கண்டுபிடித்து பேச ஆரம்பித்தால் அவர்கள் பேசுவதை நிறுத்தவே மாட்டார்கள். நான் அதன்பின் அவர்கள் பேசுவதை கேட்டுகொன்டே இருப்பேன்.
பல சமயம் அவர்களுடன் வந்தவர்கள் "பேசவே தெரியாத இந்த மனுசன் இப்படி பேசிகொன்டிருக்கிறாரே" என அதிர்ச்சியடையும் அளவு அவர்கள் பேசுவார்கள். ஒரு சமயம் ஒருவர் அவரின் மனைவி அவரை கையை பிடித்து காரில் இழுத்து செல்லும் வரை பேசிகொன்டே இருந்தார்.
இப்படி செய்து, செய்து கடைசியில் எனக்கென ஒரு இன்ட்ரோவெர்ட்டுகளால் ஆன ஒரு சோஷியல் நெடொர்க் உருவாகியே விட்டது. நான் பார்ட்டிக்கு வருவேனா என தெரிந்து கொன்டு அதன் பின்னரே வரும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல விவரம் தெரிந்தவர்கள், இவர்களுக்கு பெரிதாக நண்பர்களும் இல்லை என்பதால் எனக்கு இவர்கள் மிக நெருக்கமாக ஆகிவிட்டார்கள். எக்ஸ்டோர்வெர்ட்டுகளிடம் மொக்கை போடுவதை விட இவர்களிடம் பேசினால் மிக ஆழமாக, பல துறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் முடிகிறது.
ஆக என் மிகப்பெரிய பலவீனத்தை என் மிகப்பெரிய பலமாக இப்படி மாற்றிக்கொண்டேன்.
உன்னை அறிந்தால்,
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உங்கள் மகனோ, மகளோ கூச்ச சுபாவத்துடன் இருந்தால் அவர்களை அதற்காக் திட்டாதீர்கள். அது மிகப்பெரும் வரம் என்பதை உணருங்கள்!