Thursday, May 29, 2014

குட்டி கதைகள் : கை மேல் பலன் கிடைத்தது !

                  
           அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

Zen Stories : யானையும்...குருடர்களும்..


             
           ஒரு ஊரில் வாழும் மக்கள் அனைவரும் கடவுள் மற்றும் வெவ்வேறு மதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அது ஒரு பெரிய விவாதமாக மாறியது. அந்த விவாதம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்?" என்பதைப் பற்றியாகும். அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். பின்னர் அதற்கு சரியான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், ஒரு புத்தரை பார்த்து அவரிடம் அதற்கான பதிலை கேட்கச் சென்றனர்.
அங்கு அவரிடம் "கடவுள் பார்க்க எப்படி இருப்பார்? அதற்கு சரியான பதிலை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறினார்கள். அப்போது புத்தர் அவர்களது சீடர்களிடம் "நான்கு குருடர்கள் மற்றும் ஒரு பெரிய யானையை கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.
அந்த சீடர்களும் கொண்டு வந்தனர். பின் புத்தர் அந்த நான்கு குருடர்களிடம், "நான் ஒரு பொருளை தருகிறேன், அது என்னவென்று கூறுங்கள்" என்று கூறினார். அவர்களும் சரி என்று கூறினார்.
முதலில் அந்த குருடர்களுள் ஒருவன் யானையின் கால்களை தொட்டுப் பார்த்து, அது "தூண்" போல் இருக்கிறது என்று கூறினான். மற்றொருவன் அதன் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, அது "சுவர்" போல் இருக்கிறது என்று கூறினான். மூன்றாமவன் அந்த யானையின் காதுகளைத் தொட்டுப் பார்த்து, "துணி" போல் இருக்கிறது என்று சொன்னான். அடுத்தவன் அதன் வாலைத் தொட்டுப் பார்த்து, "கயிறு" போல் உள்ளது என்றான்.
பின்னர் புத்தர் மக்களிடம் "இந்த குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்து, அவர்கள் உணர்ந்ததை வெவ்வேறு மாதிரி கூறினார்கள். இவற்றில் எது சரி?" என்று கேட்டு, அதேப்போல் தான் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி என்று கூறி உள்ளே சென்று விட்டார்.

சிறுகதை!




ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி: சில வேளைகளில் அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!