Sunday, July 15, 2012

கை மேல் பலன் கிடைத்தது !


கை மேல் பலன் கிடைத்தது !

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

கிணற்றைத்தானே விற்றேன்


கிணற்றைத்தானே விற்றேன்

(இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை)

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

நாவினால் சுட்ட வடு


நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.