Monday, October 25, 2010

குரங்கின் பேராசை!

முன்னொரு காலத்தில் ஒரு பேரரசர் வாழ்ந்துவந்தார். பல தேசங்களும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய படைகளைத் திரட்டிக் கொண்டு ஒரு சிறிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். பகல் முழுவதும் தன்னுடைய படைகளை வழிநடத்திக் கொண்டு சென்ற அரசரும் அவருடைய வீரர்களும் வழியில் ஒரு காட்டில் ஓய்வெடுத்தனர்.

வீரர்கள் தங்களுடைய குதிரைகள் தின்பதற்காக கொஞ்சம் பட்டாணிகளை அவற்றிற்கு அருகில் வைத்தனர். அந்தக் காட்டில் ஒரு மரத்தின் மீதிருந்து இதைப் பார்த்த குரங்கு ஒன்று, கீழே குதித்து வந்து அந்தப் பட்டாணியைத் தன்னுடைய இரண்டு கைகளிலும் வாயிலும் அள்ளிக்கொண்டு மரத்தின் மேலே தாவிச் சென்று அதைத் தின்னத் தொடங்கியது.

அவ்வாறு தின்று கொண்டிருக்கையில் அதன் கையிலிருந்து ஒரு பட்டாணி கீழே விழுந்து விட்டது. பேராசை மிகுந்த அந்தக் குரங்கு தன்னுடைய கையிலிருந்த பட்டாணிகளைக் கீழே போட்டுவிட்டு காணாமல் போன அந்தப் பட்டாணியை தேடியது. அதனால் அந்த பட்டாணியை கண்டுபிடிக்க முடியவில்லை. வருத்தத்துடன் மரத்தில் ஏறிய குரங்கு, ''ஒரு பட்டாணியை அடைவதற்காக என் கையிலிருந்த அனைத்துப் பட்டாணியையும் நான் கீழே வீசி விட்டேனே'' என்று மிகவும் கவலையுடன் தனக்குள் கூறிக்கொண்டது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசர், ''சிறிய அளவைப் பெறுவதற்காக பெரிய அளவு பட்டாணிகளைத் தவறவிட்ட இந்த முட்டாள் குரங்கைப் போல நான் இருக்கக் கூடாது. சிறிய நாட்டைப் பிடிப்பதற்காகச்செல்வதை விட்டுவிட்டு, தற்போதுள்ள பரந்த ராஜ்ஜியத்தை வைத்து நான் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்'' என்று தனக்க்குள்ளாகக் கூறிக்கொண்டது.

அவரின் இந்த முடிவை அடுத்து அவரும், அவருடைய வீரர்களும் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பினர்.